இருக்கன்குடி அணை நீர்மட்டம் 11 அடியாக குறைந்தது

இருக்கன்குடி அணை நீர்மட்டம் 11 அடியாக குறைந்ததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்ெடரிக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து இருக்கன்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 21 அடி கொள்ளளவு கொண்ட இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 11 அடியாக உள்ளது. மேலும் சாத்தூர், படந்தால், வெங்கடாசலபுரம், நத்தத்துப்பட்டி, இருக்கன்குடி, நென்மேனி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக இருக்கன்குடி அணை மட்டுமே இருப்பதால் தற்போது உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அர்ச்சனாநதி மதகுப்பகுதியில் 2-வது மதகு பழுதடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை உடனே அதிகாரிகள் விரைந்து சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். .






