ரூ.8 கோடியில் மதகு புதுப்பிக்கும் பணி

பரம்பிக்குளம் சுரங்கபாதை, தூணக்கடவு அணையில் ரூ.8 கோடியில் மதகு புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரம்பிக்குளம் சுரங்கபாதை, தூணக்கடவு அணையில் ரூ.8 கோடியில் மதகு புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதகுகள் புதுப்பிப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கபாதை வழியாக தூணக்கடவு தொகுப்பு அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையில் இருந்து தூணக்கடவிற்கு செல்லும் சுரங்கபாதையின் நுழைவு வாயில் மதகு மற்றும் தூணக்கடவு அணையின் மதகுகள் சேதமடைந்தன. ஏற்கனவே கடந்த ஆண்டு பரம்பிக்குளம் அணை முழுகொள்ளளவை எட்டி இருந்த நிலையில், மதகு உடைந்ததால் தண்ணீர் வீணாகியது. இதன் காரணமாக மழைக்கு முன்பாக அணைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.8 கோடி செலவில்
பரம்பிக்குளம் அணையில் இருந்து சுரங்கபாதை வழியாக தூணக்கடவு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் நுழைவு வாயிலில் 2 மதகுகள் உள்ளன. இதேபோன்று தூணக்கடவு அணையில் 3 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக ரூ.8 கோடி செலவில் பழுதடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிதாக மதகுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மதகுகள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகளை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






