குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x

முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம், மில்லடி இடையேயான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம், மில்லடி இடையேயான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலை மறைக்காகோரையாறு பாலத்திலிருந்து பிரிந்து மில்லடி ரெயில்வே கேட் அருகில் உள்ள அரசு பள்ளி அருகே சென்று இணையும் சுமார் 3 கிலோமீட்டர தூர சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை இப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இவ்வழியாக இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களும் சென்று வருகின்றனர் . மேலும் தொலைதூரம் செல்லும் மக்கள் இவ்வழியாக வந்து கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் செக்போஸ்ட் பஸ் நிறுத்தம் சென்று முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு விதைநெல், உரம் உள்ளிட்டவைகள் அதேபோல் அவர்கள் விளைவித்த நெல் மூட்டைகளை இந்த சாலை வழியாகதான் கொண்டு வரவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

இப்படி முக்கியத்துவமும், அவசியமும் வாய்ந்த இந்த சாலை போடப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது இந்த சாலையில் தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிகிறது. பல இடங்களில் இந்த சாலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் மண் சாலையாக உள்ளது. மேலும் பல பகுதிகளில் சாலை இருப்பக்கமும் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது.இந்த சாலையை பயன்படுத்தும் மாணவர்கள், முதியவர்க்ள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கைகள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்டையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.


Next Story