தென்னந்தட்டி தயாரிக்கும் பணி பாதிப்பு


தென்னந்தட்டி தயாரிக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்னந்தட்டி தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்னந்தட்டி தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தென்னந்தட்டி தயாரிப்பு

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு சுமார் 2 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகளை கொண்டு 'தட்டி(தடுக்கு)' தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இவை பெரும்பாலும் குடிசை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இங்கு தென்னந்தட்டி பின்னுவது, பாரம் ஏற்றுவது, ஓலை சேகரிப்பது போன்ற பணிகளில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை தீவிரம்

ஆனைமலை பகுதியில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தென்னந்தட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. எனினும் தொடர் மழை, செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தென்னந்தட்டி தயாரிக்கும் பணி நலிவடைந்து வருகிறது. மேலும் அதை நம்பியிருந்த தொழிலாளர்கள் பிற தொழில்களை நாடி செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே அந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்னந்தட்டி பின்னும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ரூ.2 ஆயிரம் வரை செலவு

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தென்னை மரங்களில் இருந்து அதிகளவில் ஓலை கிடைக்கும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குறைந்தளவில் ஓலை கிடைக்கும். 2 அடி அகலம், 5½ அடி நீளத்தில் தென்னந்தட்டி தயாரிக்கப்படுகிறது. இவைகளை கேரளாவில் உள்ள செங்கல்சூளைகளுக்கும், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கிறோம். மேலும் குடிசை அமைக்க தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தென்னந்தட்டி தயாரிக்க 200 முதல் 300 வரையிலான ஓலைகளை ரூ.500 கொடுத்து வாங்குகிறோம். அவற்றை இரண்டாக கிழித்து பின்னுவது, பாரம் ஏற்றுவது, வாகன வாடகை போன்றவற்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது. இதன் மூலம் 150 தென்னந்தட்டிகள் தயாரிக்க முடியும்.

மானியம் வேண்டும்

ஆனால் 20 தென்னந்தட்டி கொண்ட கட்டு ரூ.70 முதல் ரூ.80 வரைதான் விற்பனையாகிறது. கோடைகாலங்களில் மட்டும் ரூ.90 முதல் ரூ.100 வரை விலை கிடைக்கும்.

தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக பெய்து வருவதால், தென்னந்தட்டிகள் தயாரித்தாலும் கருத்து விடுகிறது. அதை வாங்க வியாபாரிகள் முன்வருவது இல்லை. இதனால் நஷ்டம் அடையும் நிலை உள்ளது. எனவே தென்னந்தட்டி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story