சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு
மெலட்டூர் அருகே சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
பாபநாசம் தாலுகா, தேவராயன் பேட்டை மற்றும் புலிமங்களம் பகுதியில் கோடை பருவ பயிராக ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த ஆண்டு பருத்தி சாகுபடி தொடங்கிய முதலே தொடர்ந்து மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டன.
பருத்தி செடிகளின் வளர்ச்சியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காய் வைக்கும் பருவத்தில் கோடை வெப்பம் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் பருத்தி செடியில் காய்த்திருந்த பூ, பிஞ்சுகள் எல்லாம் அதிகளவில் உதிர்ந்தது.
சப்பாத்தி பூச்சி தாக்குதல்
பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டதால் எதிர்பார்த்த காய்கள் இல்லாமல் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சி எனப்படும் மாவு பூச்சிகள் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால் இலைகள், காய்கள் அனைத்தும் உதிர்ந்து செடிகள் முழுவதும் கருகி பட்டு போய் உள்ளது. பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரும் நஷ்டம்
பருத்தி செடிகளை காப்பாற்ற விவசாயிகள் எடுத்து கொண்ட முயற்சிகள் பயன் அளிக்காமல் நாளுக்கு நாள் செடிகள் கருகி வருவது அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.