காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
x

திருச்சுழி, ஆலங்குளம் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி, ஆலங்குளம் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

திருச்சுழி அருகே உள்ள சவ்வாசுபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம், பருத்தி, சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

மேலும் இந்த வருடம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் விவசாயிகள் களையெடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றிகளால் பயிர்கள் நாசம்

மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் இந்த பகுதியில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. காட்டுப்பன்றிகள் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பெரிதும் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வெளியில் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தற்போது காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா, தொடர்ந்து சாகுபடி செய்ய முடியுமா என்ற கவலையில் உள்ளனர்.

எனவே காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வயல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கவும், தொடர்ந்து பன்றிகள் பயிர்களை தாக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குளம்

அதேபோல ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளம் பகுதியில் உள்ள மக்காச்சோள பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story