வாலாஜாபாத் தாலுகாவில் ஏரிக்கரை உடைந்து வெளியேறும் தண்ணீரால் பயிர்கள் சேதம்


வாலாஜாபாத் தாலுகாவில் ஏரிக்கரை உடைந்து வெளியேறும் தண்ணீரால் பயிர்கள் சேதம்
x

வாலாஜாபாத் தாலுகாவில் ஏரிக்கரை உடைந்து வெளியேறும் தண்ணீரால் பயிர்கள் சேதம் அடைந்தது.

காஞ்சிபுரம்

கண்காணிப்பு குழுக்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 282 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது.

ஏரிகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடம்பேரி முழுவதும் நிரம்பி காணப்பட்டது. ஏரி சுற்றுப்பகுதியில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருந்தது.

ஏரியில் உடைப்பு

தம்மனூர் கிராமத்தில் ஏரிகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ள கண்காணிப்பு குழுவினர் முறையாக ஏரியை கண்காணிக்காததால் ஏரியின் மதகு அருகே உள்ள கரையில் உடைப்பு ஏற்பட்டு மிக பெரிய அளவில் கரை முழுவதும் அரித்து செல்லப்பட்டு மதகு முழுவதும் சேதமடைந்துள்ளது.

பயிர்கள் சேதம்

இதன் காரணமாக ஏரியில் நிரம்பி இருந்த நீர் முழுவதும் வெளியேறி அருகில் உள்ள வயல்வெளிகளில் முழுவதுமாக நிரம்பியதால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் ஏரியை முறையாக கண்காணிக்காததால் நீர் முழுவதும் வெளியேறி பயிர்கள் நாசமானதோடு வரும் காலத்திற்கு விவசாயம் செய்ய நீர் இல்லாமல் போனது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஏரிக்கரை உடைந்தது குறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை இளம் என்ஜினீயர் மார்கண்டன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியின் கரையை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


Next Story