சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம் பாதிப்பு


சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 10:13 AM GMT (Updated: 17 Jun 2023 10:45 AM GMT)

ஆரணி அருகே கனமழையால் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம்ாதிக்கப்பட்டு பயிர் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே கனமழையால் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு பயிர் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆரணியை அடுத்த ஆதனூர் கிராம பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அந்த மழையால் விவசாய விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 15 மின் கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல் பயிர்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. தற்போது ஏரி பாசன தண்ணீரை கொண்டு நெற் பயிர்களுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கடந்த 10 நாட்களாகவே மின்இணைப்பு இன்றி கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ''மின் கம்பம் உடைந்தும் சாய்ந்தும் கிடப்பதால் மின் சப்ளை நிறுத்தி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. உடைந்த மின்கம்பங்களுக்கு மாற்றி அமைக்க 15 மின்கம்பங்களும் ஊருக்குள் மின்வாரியத்தினார் கொண்டுவந்து போட்டு விட்டனர்.

விவசாய இடத்திற்கு விவசாயிகளே அந்த மின் கம்பத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பள்ளத்தை நீங்களே தர வேண்டும் என விவசாயிகளிடம் கேட்கின்றனர். எங்களிடம் ஆட்களும் இல்லை அதற்கு உண்டான பண வசதியும் இல்லை. எங்களால் ஈடு செய்ய முடியாது என விவசாயிகள் தெரிவித்தனர்.இது சம்பந்தமாக மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக மின் சப்ளை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

=========


Next Story