நெற்கதிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை


நெற்கதிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் நனைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் நனைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர் மழை

கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மட்டுமின்றி காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய், நெல் உள்ளிட்ட பயிர்களும், பாகற்காய், புடலங்காய், பஜ்ஜி மிளகாய், அவரைக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளும் விளைகிறது. பருவமழை தொடங்கும் ஜூன் மாதம் முதல் நெல் விவசாயம் களை கட்டி விடுகிறது. தொடர்ந்து டிசம்பர் மாத இறுதியில் நெல் கதிர்கள் விளைந்து விடுகிறது.

இதைத்தொடர்ந்து அறுவடை செய்யப்பட்டு கேரளா வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ஜூலை மாதம் நெல் நடவு பணி நடைபெற்றது. தற்போது 90 சதவீதம் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்கிறது. மேலும் சூரிய வெளிச்சம் இல்லாமல் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நெற்கதிர்கள் பாதிப்பு

தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. பச்சை தேயிலைகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதேபோல் காபி பழங்கள், குறு மிளகுகள் சேதம் அடைந்து வருகின்றன. தொடர்ந்து அறுவடைக்கு தயாராகி வரும் நெல் கதிர்களும் ஈரப்பதம் அடைந்து உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன. காலநிலை மாறி மழை மற்றும் பனிமூட்டம் காணப்படுவதால் அனைத்து பயிர்களும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நடப்பு ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக மே மாதம் முழுவதும் மழை பெய்தது. பின்னர் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யாமல் கால தாமதமாக பெய்தது. இதனால் நெல் நடவு பணி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது காலநிலை மாற்றத்தால் மழை பெய்கிறது. இதனால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story