பழங்குடியின தொகுப்பு வீடுகள் சேதம்
மயிலாடும்பாறை அருகே பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் குடியேறினர்.
தொகுப்பு வீடுகள் சேதம்
கடமலைக்குண்டு, உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2007-ம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதனையடுத்து மலைகளில் வசித்து வந்த பழங்குடியினர் அனைவரும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர்.
இந்த நிலையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான தொகுப்பு வீடுகளில் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. மழைக் காலங்களில் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.
மலைகளில் குடியேற்றம்
மேலும் வீட்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு அடிக்கடி உடைந்து விழுந்து வருகிறது. வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வீடு இடிந்து விழுந்து விடும் என்ற அச்சத்தில் உப்புத்துரை கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் சிலர் மீண்டும் மலைகளில் குடியேறி விட்டனர். வீடுகள் சேதம் மற்றும் குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மீதமுள்ள பழங்குடியினரும் மலைகளுக்கு குடியேறும் நிலையில் உள்ளனர்.
எனவே கடமலைக்குண்டு, உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தொகுப்பு வீடுகளை அரசு சீரமைக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.