சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்ற வேண்டும்
கீழையூர் அருகே சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாதன பெட்டி
கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை கடை தெருவில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மின்சாதன பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்சாதன பெட்டியில், கடைத்தெரு பகுதி, சின்னகருங்கண்ணி, ஈ.சி.ஆர்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 27 மின்கம்பங்களில் உள்ள மின்விளக்கு எரிவதற்கான மின்உபகரணம் (பீஸ்கேரியர்) இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இந்த மின் உபகரணத்தை பொருத்தி மின்விளக்கை எரிய விடுவதும், அதேபோல காலையில் பொருத்திய மின்உபகரணத்தை எடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேல் கடைகள் உள்ளன.
உயிர் சேதம்
இந்த நிலையில் அந்த மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டி சேதமடைந்து திறந்த நிலையிலே உள்ளது. இந்த பகுதி கடைத்தெரு என்பதால், கடைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் அந்த இடத்தில் குவிந்து அதன் அருகே பேசிக்கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது.
அவ்வாறு குவியும் பொதுமக்கள் தெரியாமல் இதை தொட்டால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை பார்வையிட்டு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.