பழுதடைந்த உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்ற வேண்டும்


பழுதடைந்த உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்ற வேண்டும்
x

பழுதடைந்த உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்ற வேண்டும்

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்றி, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துணை மின்நிலையம்

கீழ்வேளூர் அண்ணா நகரில் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் 33 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் கீழ்வேளூர் ஒன்றியம் 27 ஊராட்சிகளில் உள்ள 100 கிராமங்கள், கீழ்வேளூர் பேரூராட்சி 15 வார்டுகள் மற்றும் நாகை ஒன்றியம் ஆழியூர், சிக்கவலம், புலியூர், பழையனூர் மேல்பாதி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் 18 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள 110 கிலோ வாட் துணை மின் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்பாதை கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி, ஒதியத்தூர் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கீழ்வேளூர் துணை மின் நிலையத்திற்கு வருகிறது.

அடிக்கடி மின்தடை

இந்த உயர் அழுத்த மின்கம்பிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால், மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி மின்தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது. இதனால் கீழ்வேளூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம், வேளாண்மை கல்லூரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்

எனவே திருவாரூரில் இருந்து கீழ்வேளூர் வரை செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்வேளூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி:- அரசு அலுவலகங்களில் சான்றிதழ் வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சென்றால் மின்தடை காரணமாக சான்றிதழ் பெற முடியாமல் ஒரு வாரமாக அலைய வேண்டி நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கீழ்வேளூர் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றி தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

மின் உபயோக பொருட்கள் பழுது

தேவூரை சேர்ந்த அசோக்குமார்:- கடந்த ஒரு வார காலமாக தேவூர் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறைந்த அளவு மின்சாரம் வருவதால் வீட்டில் உள்ள மின் உபயோக பொருட்கள் பழுதாகி விடுகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மின்தடையை போக்க பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றி தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.


Next Story