சேதமான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
தலையாம்பள்ளத்தில் சேதமான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாம்பள்ளத்தில் தெற்கு தெரு செல்லும் சாலைஓரத்தில் மின்கம்பம் ஒன்று சேதமான நிலையில் உள்ளது.
இதனை மாற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சேதமான மின்கம்பத்தின் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின்கம்பம் நடப்பட்டது
ஆனால் மின் கம்பிகளை மாற்றி அமைக்காமல் பெயரளவில் பணிகள் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
தற்போது காற்று அதிகமாக வீசுவதால் மின்கம்பம் அவ்வப்போது ஆடுகிறது.
காற்றில் மின்கம்பம் சேதமாகி கீழே விழுந்து விபத்து ஏற்படுமோ என்று அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஓரத்தில் சேதமான நிலையில் இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.