சேதமடைந்த வேகத்தடையால் அதிகரிக்கும் விபத்துகள்
சேதமடைந்த வேகத்தடையால் அதிகரிக்கும் விபத்துகள்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சேரன் நகர், வடக்கிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகள் வளைவானது என்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் சேரன் நகரில் அடுத்தடுத்து 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் சேரன் நகர், வடக்கிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் மூலம் மேலும் சில வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
எனவே அந்த வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். பொதுவாக விபத்துகளை தடுக்க தான் வேகத்தடை அமைக்கப்படும். ஆனால் பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்ட வேகத்தடையால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் இந்த வேகத்தடை இருப்பதே தெரிவதில்லை. தற்போது ஆங்காங்கே வேகத்தடை சேதமடைந்து இருப்பதால் கடும் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு நடத்தி பிளாஸ்டிக்கால் ஆன வேகத்தடையை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.