சேதமடைந்த நிலையில் 5 மாதங்களாக: மாவட்டம் முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ள தேசியக்கொடி


சேதமடைந்த நிலையில் 5 மாதங்களாக: மாவட்டம் முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ள தேசியக்கொடி
x

மாவட்டம் முழுவதும் 5 மாதங்களாக தொங்கவிடப்பட்டுள்ள சேதமடைந்த தேசியக்கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

பல்வேறு போராட்டங்கள்

இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் பல ஆண்டுகளாக அவர்களின் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. எண்ணிலடங்கா மக்கள், ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையாகி இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை இழந்தனர். நமது இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் என்பது எளிதாக கிடைக்கவில்லை. இதற்கு மிகப்பெரிய நெடிய வரலாறு இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைய செய்யப்பட்ட தியாகங்கள் எண்ணில் அடங்காதவை.

விடுதலை பெறுவதற்காக செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்கள், தியாகங்களுக்கு கிடைத்த வெற்றியாக கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அன்று இந்தியாவிற்கென உருவாக்கப்பட்ட மூவர்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்திய நாட்டின் தேசியக்கொடியானது பல்வேறு பரிமாணங்களுக்கு பிறகு இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை என மூவர்ணத்திலும், வெள்ளை நிறத்தின் நடுவில் கடற்படையின் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரம் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

தினமும் மாலையில் இறக்கப்படும்

தேசியக்கொடி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கான அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஒரு நாளில் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறு மடித்து வைக்க வேண்டும் என்ற வழிமுறையும் உண்டு. தேசியக்கொடிக்கு என்று தனி பாடலும் உள்ளது.

இந்திய நாட்டை பொறுத்தவரை வருடத்தின் முக்கிய 2 நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக்கொடியானது பிரதமர், அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகள், நீதிமன்றங்களில் நீதிபதிகள் போன்றவர்களால் ஏற்றப்படுவது வழக்கம். அதுபோல கல்வி நிறுவனங்களிலும் அந்நாளில் தேசியக்கொடி ஏற்றப்படும். அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் பல அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி காலையில் ஏற்றப்பட்டு அன்று மாலை இறக்கப்படும் பழக்கம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

தேசியக்கொடிக்கு மரியாதை

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி இந்த சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், அதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள வீடுகளில் ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய 3 நாட்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமெனவும் தெரிவித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகஸ்டு 13-ந் தேதி தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவித்து கொண்டார்.

தனி சட்டம்

இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பிறகு தேசியக்கொடி பெரும்பாலான இடங்களில் இறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை குளித்தலை நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதிலும் இந்த தேசிய கொடியானது வீடு, கடைகளின் மேற்கூரையிலும், மாடியின் உச்சியிலும், வீட்டின் முகப்பில் உள்ள கம்பங்கள், தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் போன்றவற்றில் குச்சியில் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. பல இடங்களில் இந்த தேசியக்கொடிகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இது நமது நாட்டின் தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாக உள்ளது. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்காமல் எரித்தாலோ, சேதப்படுத்தினாலோ, இழிவுபடுத்தினாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க தனி சட்டம் உள்ளதென கூறப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் நமது நாட்டில் உள்ள அனைவரையும் உலகறிய செய்ய ஒற்றை அடையாளமாக இருப்பது நமது நாட்டின் தேசியக்கொடி. அந்த தேசியக்கொடிக்கு கண்ணியமாக உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

நமது நாட்டின் தேசியக்கொடியை போற்றுவதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய கடமை. தேசியக்கொடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் எங்கெங்கு தேசியக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதோ அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவு பிறப்பித்து நாட்டின் தேசிய கொடிக்கான மரியாதையை மீட்டெடுக்க வேண்டும்.

நெஞ்சில் முள் குத்துவது போல...

ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ம.அந்தோணிசாமி கூறியதாவது:- நான் மாணவனாக இருந்த காலத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் பள்ளிகளில் காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்க வேண்டும் என்ற விதிமுறை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நான் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெறும் வரை, நான் பணியாற்றிய பள்ளிகளில் திங்கட்கிழமை தோறும் காலையில் பள்ளி இறைவழிபாட்டு கூட்டத்தின்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு உரிய மரியாதை அளிக்கப்படும்.

பின்னர் மாலை தேசியக்கொடி இறக்கப்படும். 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசின் அறிவிப்பின் காரணமாக இல்லங்கள்தோறும் 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. தற்போது 5 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், சில இடங்களில் கட்டப்பட்ட தேசியக்கொடிகள் இன்று வரை இரவு, பகலாக பறப்பதை பார்க்கும்போது நெஞ்சில் முள் குத்துவது போல இருக்கிறது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவமானப்படுத்தும் செயல்

ஓய்வுபெற்ற தேசிய மாணவர் படை ஆசிரியர் தட்சணாமூர்த்தி கூறியதாவது:-

நமது நாட்டின் தேசியக்கொடியை மாலை 6 மணிக்கு மேல் பறக்க விடக்கூடாது என்பது சட்டத்தில் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உள்ள பல மாநில ரெயில் நிலையங்களில் தேசியக்கொடியானது நாள் முழுவதும் பறந்து கொண்டே இருக்கிறது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்களுக்கு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை தேசியக்கொடிகள் அகற்றப்படாமல் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே உள்ளது.

உரிய மரியாதை அளிக்க வேண்டும்

முன்னாள் ராணுவ வீரர் சிவராமன் கூறியதாவது:- தேசியக்கொடியை எங்கு ஏற்ற வேண்டுமோ அங்கு மட்டுமே ஏற்ற வேண்டும். சூரிய உதயத்திற்கு பின்னர் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை சூரியன் மறைவதற்கு முன்னர் இறக்கிவிட வேண்டும். தேசியக்கொடியின் நடுவே உள்ள சக்கரம் முழுமையாக தெரியும் வகையில் கொடியை மடித்து பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

ஆனால் இங்கோ, பல இடங்களில் வீடுகள், கடைகள் போன்றவற்றில் தேசியக்கொடி சாய்வான நிலையில் குச்சியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதன் வண்ணம் மாறி தூசி படிந்து சேதம் அடைந்து உள்ளது. இது தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாக உள்ளது. நம் நாட்டின் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story