ஆலந்தூரில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்கள் ரூ.165 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆலந்தூரில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்கள் ரூ.165 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள பாரத் நகர் நல சங்கத்தின் சார்பில் குடும்ப நல்லிணக்க விழா நடந்தது. விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 78 வயது நிரம்பிய 7 தம்பதியர்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
ஆலந்தூர் நகரமன்ற தலைவராக ஆர்.எஸ்.பாரதி இருந்த போது 1996-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது பாதாள சாக்கடை செல்லும் பிரதான குழாய்கள் பலவீனமடைந்துள்ளது. இதனால் வாயு ஏற்பட்டு குழாய் உடைந்து சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. எனவே 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை அகற்றிவிட்டு, ரூ.165 கோடியில் புதிய குழாய்கள் பதிக்கப்படும். இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கி, 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், சுதா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.