பழுதான வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது


பழுதான வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது
x

விபத்தில் உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க பழுதான வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திறந்தவெளி கிணறுகள்

திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரிகள் ஆகியவை கண்ணுக்கு தெரியாத வகையில் இருப்பதால் ஆபத்து ஏற்படுகின்றன. எனவே அவைகளில் விபத்து நேராத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

சோளிங்கர் வட்டம், பெருங்காஞ்சியில் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்திட பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் இயக்க வேண்டும்

வாலாஜா தாலுகா, தெங்கால் கிராமத்திற்கு 2 பஸ்கள் வேலூரிலிருந்து புளியங்கண்ணு மற்றும் அவரகரை வழியாக வருவது வழக்கம். சில நாட்களாக ஒரு பஸ் சரியாக வராததால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து கழகம் சார்பில், அந்த பஸ்சை இயக்கிட வேண்டும்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பாதை மட்டும் சரி செய்யப்படாமல் உள்ளது. தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை. எனினும் சுரங்கப்பாதையின் கீழ் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், பாலம் வேலை தொடங்கும் வரை பாலத்தின் கீழ் போக்குவரத்தினை அனுமதிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாகனங்களை நிறுத்தக் கூடாது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பழுதடைந்த அல்லது ஓய்வெடுக்க நிறுத்தப்படும் வாகனங்களால் பெரும் விபத்து மற்றும் உயிர் பலிகள் ஏற்படுகின்றன. இதனை தடுத்திட வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்ற பலகை உபயோகிக்க வேண்டும். அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story