இடையக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
இடையக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில், ஊருக்கு நடுவே 50 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இடையக்கோட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாளடைவில் சேதமடைந்தது. தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நீர்த்தேக்க தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. ஆனால் அது இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.