தமிழகத்தில் அரசு பள்ளிகள் சேதம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அரசு பள்ளிகள் சேதமாகி உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார் .
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே செங்கபடை கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது, கணினி யுகம் என்று சொல்லி வல்லரசு நாடுக்கு இணையாக உலகத்தில் எந்த நாட்டில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
அந்த திட்டத்தை 52 லட்சம் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் தி.மு.க. பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி தரவில்லை. கல்வி உபகரணங்கள் தரவில்லை. பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதையெல்லாம் சரிசெய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணபாண்டி, மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, கள்ளிக்குடி ஒன்றிய துணை தலைவர் கலையரசி கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.