நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 44.20 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 4.10 அடி தண்ணீர் உயர்ந்து 48.30 அடியாக உள்ளது. விரைவில் 50 அடியை தொட உள்ளது. சேர்வலாறு அணையில் நேற்று முன்தினம் 65.9 அடியாக இருந்த நீர்மட்டம் 73.46 அடியாக உயர்ந்து உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் 49 அடியாக இருந்த அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 8 அடி உயர்ந்து 57 அடியாகவும், 28.50 அடியாக இருந்த கடனாநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 33.50 அடியாகவும் உள்ளது.

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலவரப்படி மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

அம்பை- 7, மணிமுத்தாறு-1, பாபநாசம்- 14, ராதாபுரம்-12, சேர்வலாறு- 3, கன்னடியன் அணைக்கட்டு- 4, கொடுமுடியாறு -6, மாஞ்சோலை-23, காக்காச்சி- 30, நாலுமுக்கு- 45, ஊத்து- 48.

அடவிநயினார்- 50, சிவகிரி- 8, தென்காசி- 6, செங்கோட்டை- 21.40, குண்டாறு- 36.80, கடனாநதி- 18, கருப்பாநதி, ராமநதி- 8.


Next Story