அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
சேலம் மாநகர் முழுவதும் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
பொங்கலிட்டு வழிபாடு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சேலம் மாநகரை பொறுத்தவரை ஆடி மாதம் 3-வது வாரத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநகர் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு விடிய, விடிய கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். நேற்றும் காலை முதலே திரளானோர் கோவிலுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை கோவிலில் பொங்கல் வைபவம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
மேலும் பக்தர்கள் சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குகை மாரியம்மன், காளியம்மன்
இதேபோல் சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள் கோவிலுக்கு எதிரே உள்ள மைதானத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையொட்டி மாரியம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல் அஸ்தம்பட்டி மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், கோர்ட்டு சாலையில் உள்ள சர்வசக்தி மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று பொங்கல் வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊர்வலம்
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மேலும் மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவிலுக்கு வருதல் உள்ளிட்டவை நடந்தன. ஆடித்திருவிழாவால் சேலம் மாநகர் முழுவதுமே விழா கோலம் பூண்டது. திருவிழா நடைபெறும் ஒவ்வொரு கோவிலிலும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.