பழனியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
கடும் வெயிலால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பழனி நகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாலாறு-பொருந்தலாறு அணை
பழனி நகரின் குடிநீர் ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் ஆகியவை உள்ளன. இவை, கொடைக்கானல் செல்லும் சாலை பகுதியில் மலையடிவாரத்தில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் ஓடைகளின் மூலம் இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தது. இதனால் குடிநீர், பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
இந்நநிலையில் கோடை காலம் தொடங்கும் முன்பே பழனி பகுதியில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் சரிந்து வருகிறது. அந்த வகையில் பழனியில் உள்ள கோடைகால நீர்த்தேக்கம், பாலாறு-பொருந்தலாறு அணைகளின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. இதேநிலை நீடித்தால் கோடைகாலத்தில், பழனியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து பழனி நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பழனி நகருக்கு கோடைக்கால நீர்தேக்கத்தில் இருந்து தினமும் 3 எம்.எல்.டி. தண்ணீரும், பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 3.5 எம்.எல்.டி. தண்ணீரும் (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர் தண்ணீர்) குடிநீர் பெறப்படுகிறது. இதில் கோடைகால நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 4.5 மீட்டரில் 3.9 மீட்டர் வரை தண்ணீர் உள்ளது. இதுவே 3 மாதத்துக்கு போதுமானது. எனவே பழனியை பொறுத்தவரை தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனினும் மக்கள் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.