பூட்டிக்கிடந்த வங்கியில் அபாய ஒலி ஒலித்ததால் பரபரப்பு
புதுச்சத்திரம் அருகே பூட்டிக்கிடந்த வங்கியில் அபாய ஒலி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாதிரிபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி நேற்று விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் திடீரென வங்கியில் அபாய ஒலி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் அனைவரும் வெளியூரில் இருந்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யாரும் வங்கிக்கு வரவில்லை.
அதன் காரணமாக நீண்ட நேரமாக அபாய ஒலி ஒலித்துக் கொண்டே இருந்தது. பின்னர் வங்கிக்கு வந்த மேலாளர் ரவிக்குமார், வங்கியின் பூட்டை திறந்து வங்கிக்குள் சென்று அபாய ஒலியை நிறுத்தினார். மேலும் வங்கியில் ஆய்வு செய்தார். பின்னர் வங்கியில் அனைத்து பொருட்களும் பத்திரமாக உள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அபாய ஒலி ஒலித்திருக்கலாம் எனவும் கூறினார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.