உளுந்தூர்பேட்டை பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


உளுந்தூர்பேட்டை பகுதியில்  பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்  கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
x

உளுந்தூர்பேட்டை பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

பஸ்களில் அலைமோதும் கூட்டம்

உளுந்தூர்பேட்டை நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் சேந்தநாடு, மதியனூர், ஆரியநத்தம், நைனாகுப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் வந்து செல்கிறார்கள். தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராமங்களில் இருந்து உளுந்தூர்பேட்டை நகருக்கு வந்து செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆபத்தான பயணம்

குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளிக்கு வந்து மீண்டும் வீடு செல்கின்றனர். சிலநேரங்களில் மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வரும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படுவதால் தான் இவ்வாறு கூட்டநெரிசல் ஏற்படுவதாக மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளி நேரங்களில் உளுந்தூர்பேட்டையில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story