ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆபத்தான மரங்கள்
அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் விழும் நிலையில் உள்ளன. எனவே, அந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் விழும் நிலையில் உள்ளன. எனவே, அந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆபத்தான மரங்கள்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அய்யன்கொல்லி, அத்திசால், பாதிரிமூலா, செறியேரி, குழிக்கடவு, தட்டாம்பாறை, கருத்தாடு, கோட்டப்பாடி, செம்பக்கொல்லி, மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி டேன்டீ உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், மருந்தாளுனர், நர்சுகள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே சுகாதார நிலையத்தையொட்டி ஆபத்தான மரங்கள் உள்ளன. அதன் கிளைகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது மரத்தின் கிளைகள் கீழே விழுந்து வருகின்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு காயம் ஏற்படும் நிலை உள்ளது. சில நேரங்களில் காயமடைந்தும் உள்ளனர்.
அகற்ற வேண்டும்
மேலும் பருவமழையின் போது பலத்த காற்று வீசும் போது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காட்சியளிப்பதால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள ஆபத்தான மரங்களை அகற்றாததால், நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். இதற்கிடையே மரக்கிளைகள் விழுந்து நோயாளிகளின் தலையை பதம் பார்த்து வருகிறது. எனவே, ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.