தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அரசு கலைக்கல்லூரி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்துமுனை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அரசு கலைக்கல்லூரி செயல்பட உள்ளது. அதன்படி கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கல்லூரியை தொடங்கி வைத்தார். இதையடுத்து தாராபுரம் கல்லூரியில் நடந்த விழாவில் கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு பாராளுமன்ற தொகுதி கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தாராபுரம் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கல்லூரியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். உயர் கல்வியியை அனைவரும் பெறும் வகையில் இலவசக்கல்வித்திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புற மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு மேல் படிப்பிற்கு வெகு தொலைவிற்கு செல்ல முடியாத சூழ்நிலை மாறி உள்ளது. முழுமையான மனிதவள மேம்பாட்டிற்கு உயர்கல்வி அடித்தளமாக அமைகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 23 கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் கூடுதலாக 7500 மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. தாராபுரம் இந்த கல்லூரிக்கு 500 மாணவ- மாணவிகள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.. அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியானதாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கு.புஸ்பலதா, தாராபுரம் நகர மன்றத்தலைவர் கு.பாப்புகண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் ரா.சிவசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.