மதுரை அருகே மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று துணிகரம்: ஆபாச வீடியோ எடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; நகை-பணமும் பறிப்பு- காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது


மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று ஆபாச வீடியோ எடுத்து பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பணம்-நகையை பறித்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று ஆபாச வீடியோ எடுத்து பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பணம்-நகையை பறித்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கூட மாணவி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மங்கலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 21). இவருக்கும் மதுரை நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் மதுரையில் சில இடங்களுக்கு சென்று, ஊர் சுற்றி உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சிவராமன் அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, கீழவளவு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நண்பர்கள் வருகை

அந்த சமயத்தில் சிவராமனின் நண்பர்களான மேலவளவு பகுதியை சேர்ந்த விஜயகுமார்(27), உத்தங்குடியை சேர்ந்த வினோத்குமார் (19) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள், காதலர்கள் தனிமையில் இருப்பதை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அவர்களும் அந்த வீடியோ காட்சிகளை மாணவியிடம் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும், இங்கு நடந்ததை வெளியே கூறினால், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டியதாக ெதரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டார்.

மிரட்டல்

இதற்கிடையே, சிவராமன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டியதுடன், அவரிடம் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை பறித்தனர். இவர்கள் தொல்லை அதிகமாகவே இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவுப்படி குற்றவாளிகளை கைது செய்ய புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், காதலன் சிவராமன் திட்டமிட்டு பள்ளி மாணவியை மலை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும், அங்கு நண்பர்களை வரவழைத்து அதனை வீடியோவாக பதிவு செய்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதனை தொடர்ந்து சிவராமன், விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story