தர்கா, கல்லறைகள் இடிப்பு


தர்கா, கல்லறைகள் இடிப்பு
x

தர்கா, கல்லறைகள் இடிக்கப்பட்டன.

திருச்சி

தர்கா, கல்லறை இடிப்பு

திருச்சி தென்னூர் ஜெனரல்பஜார் பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் முஸ்லிம்களின் கபரஸ்தான் (கல்லறை) மற்றும் தர்கா ஒன்று உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு பல கோடி இருக்கும். இந்தநிலையில் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்று தர்கா தரப்பினருக்கும், தனியார் சிலருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடந்து வந்தது. இதில் இருதரப்பினரும் வக்பு வாரிய தீர்ப்பாயத்தில் ஆஜர் ஆகி, அதன் முடிவுக்கு இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கபரஸ்தானில் இருந்த கல்லறைகளையும், தர்காவையும் நேற்று அதிகாலை தனியார் தரப்பினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தனியார் தரப்பினர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதுபற்றி முஸ்லிம் அமைப்பினர் தில்லைநகர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திர டிரைவர் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே தர்காவை இடித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், கலெக்டர் ஆய்வுப்பணிக்காக வெளியூர் சென்று இருப்பதாக கூறியும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். அத்துடன் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததும், முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ஜமாதுல் உலமா சபை மாவட்ட செயலாளர் இனாமுல் ஹசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்காவை இடித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட தர்காவை அரசு சார்பாக கட்டித்தர வேண்டும் என்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவற்றை விரைவில் நிறைவேற்றி தருவதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இதேபோன்று சம்பவம் நடந்தது. பொய்யான ஆவணங்களை தயார் செய்து அந்த இடத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் 10 நாட்களுக்குள் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்வதாக ஆர்.டி.ஓ. கூறியுள்ளார். இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஜமாத் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story