ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பென்னாகரம்:
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். மேலும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை இந்த நாட்களில் ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும் நம்பிக்கையும் உண்டு.
இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆடி அமாவாசையான நேற்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 500 கனஅடியாக இருந்த தண்ணீர் அளவு நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல்லில் நேற்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.