விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை -வீடு இடிந்து கல்லூரி மாணவி படுகாயம்
கோவையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் வீடு இடிந்து கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
கோவையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் வீடு இடிந்து கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அது போல் கோவையில் நேற்று முன்தினம் தொடங்கி விடிய, விடிய விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் நேற்று முன்தினம் இரவு லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழைநீர் தேங்கியது
இதையடுத்து அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய மழை நீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. மேலும் தொடர் மழையால் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத் தில் மழைநீர் தேங்கியது. இதனால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களும் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை விரைந்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் தேங்கிய மழைநீரை அகற்றினர். அதன்பிறகும் மழை பெய்ததால் மீண்டும் மழைநீர் தேங்கியது.
ேசறும், சகதியுமான சாலைகள்
கோவையில் பெய்யும் தொடர் மழை காரணமாக தடாகம் ரோடு, செல்வபுரம் ரோடு, குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி ரோடு, போத்தனூர் ரோடு, ஸ்ரீபதி நகர், சீரநாயக்கன்பாளையம், குறிச்சி, புட்டுவிக்கி ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் அந்த ரோடுகளில் செல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் இந்த சாலை வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் மீது அந்த வழியாக சென்ற வாகனங்கள் மழைநீரை வாரி இறைத்தபடி சென்றன.
நொய்யல் ஆறு
கோவை உக்கடம் பைபாஸ் ரோடு சுங்கம் ரூபா நகரில் மழைக்க தாங்காமல் பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதை அறிந்த மாநக ராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
மழைகாரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. சுண்ணாம்பு காளவாய், புட்டுவிக்கி தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை அந்த பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மாணவி படுகாயம்
கோவை வடவள்ளி பொம்மன்பாளையம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் நிவேதா (வயது17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அவருடைய தந்தை ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால் தனது தாயார் கனகலட்சுமி (42), அண்ணன் ரமேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கனமழை பெய்தது. அப்போது அவரது வீட்டில் சிமெண்ட் சீட் போட்ட பாத்ரூமில் சென்று நிவேதா பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தார்.
அவருடைய வீட்டின் அருகே கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாத மண்சுவரால் ஆன வீடு உள்ளது. அந்த வீட்டின் சுவர் திடீரென்று மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தது. அந்த இடி பாடுகளில் சிக்கி நிவேதா படுகாயம் அடைந்து கூச்சலிட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.