கோவையில் விடிய, விடிய வாகன சோதனை


கோவையில் விடிய, விடிய வாகன சோதனை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. அதுபோன்று பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. அதுபோன்று பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து கோவை வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. மாநகர எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர்.

விடிய, விடிய சோதனை

மேலும், வெளியூர்களில் இருந்து கோவை வந்த வாகனங்களின் பதிவு எண், டிரைவர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை போலீசார் பதிவு செய்தனர். இந்த சோதனை விடிய விடிய நடந்தது. மேலும் சந்தேக நபர்கள் இருந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதுதவிர கோவை மாநகர பகுதியில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் ஆகிய பஸ் நிலையங்கள், கோவை மற்றும் போத்தனூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு

குறிப்பாக கோவை ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் பிரதான நுழைவு வாயில் மற்றும் 2-வது நுழைவு வாயிலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடமைகள் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோன்று ரெயில் நிலைய நடைமேடையில் (பிளாட்பாரம்) பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். ரெயிலில் இருந்து இறங்குவது யார்? அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் தண்டவாளத்தில் சோதனை நடத்தப்பட்டது.

3 அடுக்கு பாதுகாப்பு

அத்துடன் கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோன்று சித்ரா சிக்னலில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்காரவீதி, 100 அடி ரோடு, சாய்பாபாகாலனி, ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் பகுதி ஆகிய இடங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று புறநகர் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story