விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை


விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை
x

கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

விடிய, விடிய கொட்டிய மழை

வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்தது.

இதில் நொய்யல், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், குந்தாணிபாளையம், நத்தமேடு, உப்புபாளையம், புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை, பசுபதிபாளையம், கொங்கு நகர், நல்லிக்கோவில், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், மூலமங்கலம், மூர்த்திபாளையம், கந்தம்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய்புகழூர், சேமங்கி, கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கொட்டிய மழை நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அதன் பிறகும் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக தார்சாலையின் இருபுறமும் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதன் காரணமாக பெரிய வாகனங்களின் டயர்கள் மழை நீரில் பட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது மழைநீர் தெளித்து நனைந்து கொண்டே சிரமப்பட்டு செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் தொடர்ந்து மழை கொட்டியதால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் வறண்டு இருந்த கிணறுகளில் ஊற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்குபாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், அரவக்குறிச்சி, அணைப்பாளையம், க.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, கடவூர் மற்றும் பாலவிடுதி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

மாவட்டத்தில் மொத்தம் 354.40 மி.மீ மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் 61.2 மி.மீ. மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-31.4, அரவக்குறிச்சி-24, அணைப்பாளையம்-40, க.பரமத்தி- 47.4, குளித்தலை-30, தோகைமலை-3, கிருஷ்ணராயபுரம்-61.2, மாயனூர்-55, பஞ்சப்பட்டி-27, கடவூர்-4, பாலவிடுதி-11.4, மயிலம்பட்டி-20 என பதிவாகியுள்ளது.


Related Tags :
Next Story