ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய 150 டன் பூக்கள் விற்பனை
ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய 150 டன் பூக்கள் விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய 150 டன் பூக்கள் விற்பனையானது.
ஓணம் பண்டிகை
கேரளா மற்றும் அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஓணம் என்றாலே அத்தப்பூ கோலம் தான் நினைவுக்கு வரும். அதற்காக மக்கள் வண்ண வண்ண பூக்களால் வீட்டு வாசல் முன்பும், அலுவலக வாசல் முன்பும் அத்தப்பூ கோலமிடுவார்கள்.
இதனால் ஓணப்பண்டிகைக்காக தோவாளை பூ மார்கெட்டில் ஆண்டின் ஒருநாள் மட்டும் இரவு வியாபாரம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி விடிய, விடிய பூ வியாபாரம் நடந்தது. இதற்காக வியாபாரிகள் டன் கணக்கில் பல வண்ணப் பூக்களை (கிரேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி, ரோஜா வகைகள், ஆஸ்ரா வகைகள்) ஆர்டர் செய்தனர். அதன்படி இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக உள்ளூர், வெளியூர் என சுமார் 300 டன் பூக்கள் மார்கெட்டில் விற்பனைக்காக வந்து குவிந்தன.
வியாபாரிகள் கவலை
கேரளாவில் இருந்து வியாபாரிகள் தோவாளை பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கினார்கள். இருப்பினும் வியாபாரிகள் எதிர்பார்த்தபடி பூக்கள் விற்பனையாகவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
வியாபாரம் குறித்து பூ வியாரி ஒருவர் கூறியதாவது:-
ஓணம் வியாபாரத்துக்காக இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக பூக்கள் அதாவது சுமார் 300 டன் வரையிலும் மார்கெட்டுக்கு பூக்கள் வந்து குவிந்தது. விடியவிடிய வியாபாரம் நடைபெற்றும் சுமார் 150 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கேரள வியாபாரிகள் சிலர் மாரக்கெட்டுக்கு வராமல் நேரடியாக வெளியூரில் பூக்களை கொள்முதல் செய்துள்ளனர். இதனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கேரளாவிலிருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வரவில்லை. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிச்சி கிலோ ரூ.1,350
தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோவுக்கு வருமாறு:-
பிச்சி ரூ.1,350, முல்லை, ரூ.1,300, மல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.500, அரளிப்பூ ரூ.150, வாடாமல்லி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, சம்பங்கி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.200, துளசி ரூ.50, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.50, மஞ்சள் சிவந்தி ரூ.150, வெள்ளை சிவந்தி ரூ.250, ஒரு கட்டு ஸ்டெம்பு ரோஸ் ரூ.300, 100 தாமரை பூக்கள் ரூ.1,000, 100 ரோஜாக்கள் ரூ.20-க்கும் விற்பனையானது.