கடலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய சோதனை: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,777 பேர் மீது வழக்கு


கடலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய சோதனை: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,777 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:17+05:30)

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய போலீசார் நடத்திய சோதனையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,777 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய 7 உட்கோட்ட பகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக போலீசார் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இந்த சோதனை நேற்று காலை வரை விடிய, விடிய நடந்தது. இந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,777 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

ரவுடிகள்

இது தவிர 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று கண்காணித்தனர். அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். 4 தலைமறைவு குற்றவாளிகள், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். இது தவிர மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகமான முறையில் யாராவது தங்கி உள்ளார்களா? என்று ஆய்வு செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக 26 வழக்குகள் பதிவு செய்து, 27 பேரை கைது செய்தனர். இந்த சோதனை வருகிற 23-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.


Next Story