ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நாள்முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நாள்முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனைமலை
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளுர் மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 5 கோவில்களில் நாள்முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளி சாதம், வெண்பொங்கல், சக்கரை பொங்கல், மிளகு சாதம் என 4 வகையான உணவுகள் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.