ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேர பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்


ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேர பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்
x

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

ராமேசுவரம்-மதுரை

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதன் எதிரொலியாக பல்வேறு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2½ ஆண்டுகளுக்கு மேலாக ராமேசுவரம் மதுரை இடையே பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ராமேசுவரம்-மதுரை இடையே 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் பகல் நேரத்தில் மீண்டும் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு மதுரைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. பாம்பன் ரெயில் பாலம் வழியாக மெதுவாக கடந்து மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சத்திரக்குடி, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் வழியாக இந்த ரெயிலானது மதியம் 2.40 மணிக்கு மதுரை சென்றடைந்தது.

பயணிகள் மகிழ்ச்சி

இதேபோல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலானது அதே பாதை வழியாக வந்து மாலை 4.10-க்கு மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. 2½ ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் மீண்டும் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் வருகிற 27-ந் தேதி முதல் கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மதுரை வழியாக வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story