டி.சி.கண்டிகை கிராமத்தில் கல்குவாரி குத்தகைக்கு அனுமதி வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு


டி.சி.கண்டிகை கிராமத்தில் கல்குவாரி குத்தகைக்கு அனுமதி வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு
x

டி.சி.கண்டிகை கிராமத்தில் கல்குவாரியை குத்தகை எடுக்க அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து ஒட்டப்பட்ட கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரியை குத்தகை எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ, ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள் சார்பில் கடிதம் அனுப்பியிருந்தனர். கல்குவாரி அமைய உள்ள இடத்தில் வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்வதற்கும், கல்குவாரி உரிமையாளர் தரப்பில் எந்திரங்கள் பொருத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 3 முறை டி.சி.கண்டிகை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 7-ந் தேதி திருத்தணி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கல்குவாரி உரிமையாளருக்கும், டி.சி.கண்டிகை பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் டி.சி. கண்டிகையில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டி.சி.கண்டிகை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், டி.சி.கண்டிகை கிராம மக்கள் உயிரோடு விளையாடாதே, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, கல்குவாரி அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கல்குவாரியை மூடும் வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி நகரில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story