கந்தம்பாளையம் அருகே லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி சாவு
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலியானார்.
பால் பண்ணை தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ள ஆறுமுகம், வசந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்து பால் பண்ணைக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கந்தம்பாளையம் அருகே இருட்டனை வெங்கமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி, ஆறுமுகம் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், தலையில் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லாரி மோதி பலியான ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.