மத்தாப்பு பற்றவைத்தபோது தீப்பிடித்தது உடல் கருகி 2-ம் வகுப்பு மாணவி சாவு; திங்களூர் அருகே பரிதாபம்
திங்களூர் அருகே மத்தாப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்து உடல் கருகி 2-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
கோபி
திங்களூர் அருகே மத்தாப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்து உடல் கருகி 2-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
மாணவி
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள கிழக்குப்புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா. இவர்களுடைய மகள் சஸ்விதா (7). சிறுமி செல்லப்பம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
மேகலாவின் தந்தை சாமிநாதனின் வீடு போலநாயக்கன்பாளையத்தில் உள்ளது. இந்த நிலையில் சஸ்விதா தீபாவளியையொட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாத்தா சாமிநாதனின் வீட்டு்க்கு சென்றிருந்தார்.
உடல் கருகியது
தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டு இருந்த சஸ்விதா, மத்தாப்பை எடுத்து பூஜை அறையில் உள்ள விளக்கில் பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சஸ்விதாவின் ஆடையில் தீ பற்றியது. சில நொடிகளில் மளமளவென பரவிய தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது.
இதனால் உடல் கருகிய சஸ்விதா வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன்பின்னர் வீட்டுக்கு வந்த பின்னரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சஸ்விதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சஸ்விதாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.