வெப்படை அருகே லாரி மோதி விசைத்தறி மேஸ்திரி சாவு-டிரைவர் மீது வழக்கு
பள்ளிபாளையம்:
வெப்படைஅருகே லாரி மோதிய விபத்தில் விசைத்தறி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசைத்தறி மேஸ்திரி சாவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி ராஜராஜன் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் ( வயது 55). இவர் விசைத்தறி மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவர் குமாரபாளையத்தில் இருந்து சொந்த வேலையாக பள்ளிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் வெப்படை அருகே எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் முன்னால் சென்ற காரை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர் மீது வழக்கு
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக அரியலூரை சேர்ந்த லாரி டிரைவர் ஸ்ரீராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற விசைத்தறி மேஸ்திரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.