ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் பலி


ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு 11-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் நாகப்பா. இவருடைய மகன் மதுகுமார் (வயது 23). இவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுகுமார் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டமலை காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.

பலி

அப்போது திடீரென மதுகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மதுகுமாரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் ஒகேனக்கல் பரிசல் துறையில் மதுகுமார் பிணமாக மிதந்தார். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மதுகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story