ஜேடர்பாளையம் படுகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு-நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


ஜேடர்பாளையம் படுகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு-நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் படுகை அணையில் நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் ராம். இவருடைய மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பிரவீன், கோவை, திருப்பூர், விருதாச்சலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த தனது நண்பர்கள் 8 பேருடன் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

தண்ணீரில் மூழ்கினார்

அங்கு படுகை அணையை அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் அணையில் இறங்கி காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து மகிழ்ந்தனர். அப்போது திடீரென பிரவீன் தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் அவரை காணாமல் மற்ற நண்பர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் மீனவர்கள் உதவியுடன் பரிசலில் சென்று, பிரவீனை தேடினர்.

சோகம்

அப்போது பிரவீன் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆத்தூரில் உள்ள பிரவீனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பிரவீனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது படுகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story