பள்ளிபாளையத்தில் சோகம்குளிர்பானம் என நினைத்து பெயிண்டை குடித்த சிறுமி சாவுஅக்காளுக்கு தீவிர சிகிச்சை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் குளிர்பானம் என நினைத்து பெயிண்டை குடித்த 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளுடைய அக்காளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்காள்-தங்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (26). இந்த தம்பதிக்கு மவுலீஸ்வரி (6), தேஜா ஸ்ரீ (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். மவுலீஸ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அக்காள்-தங்கை இருவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளில் பெயிண்டு பாட்டில் ஒன்று இருந்தது.
பரிதாப சாவு
அதனை குளிர்பானம் என நினைத்து, சிறுமிகளான மவுலீஸ்வரி, தேஜா ஸ்ரீ ஆகியோர் அடுத்தடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து பதறி போன பெற்றோர், சிறுமிகளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி தேஜா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மவுலீஸ்வரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெயிண்டை குடித்து பலியான தேஜா ஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையத்தில் குளிர்பானம் என நினைத்து, பெயிண்டை குடித்த 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.