மகேந்திரமங்கலம் அருகே கல் தடுக்கி கீழே விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பலி-பள்ளி வாகனத்தை பிடிக்க ஓடியபோது பரிதாபம்


மகேந்திரமங்கலம் அருகே கல் தடுக்கி கீழே விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பலி-பள்ளி வாகனத்தை பிடிக்க ஓடியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே பள்ளி வாகனத்தை பிடிக்க ஓடியபோது, கல் தடுக்கி கீழே விழுந்ததில் 6-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

6-ம் வகுப்பு மாணவன்

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள நீலகிரியான்கொட்டாயை சேர்ந்தவர் ராமசாமி. ராணுவ வீரரான இவர் ஐதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ் (வயது 11). இவன் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் வீட்டில் இருந்து, பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு சென்று வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை மாணவன் சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பினான். அப்போது வீட்டின் அருகே பள்ளி வாகனம் வந்து நின்றது. அதை பிடிப்பதற்காக சதீஷ் வாகனத்தை நோக்கி வேகமாக ஓடினான். அப்போது சாலையில் கிடந்த கல், அவனது காலில் தடுக்கியது.

கீழே விழுந்து பலி

இதனால் சதீஷ் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் அடைந்தான். தலையில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதை கண்டு, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சதீசை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று, சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளி வாகனத்தை பிடிக்க ஓடியபோது, கல் தடுக்கி விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story