ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஜவுளி நிறுவன ஊழியர் பலி-நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
பென்னாகரம்:
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி ஜவுளி நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஜவுளி நிறுவன ஊழியர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 36). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, பேபி என்கிற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த 30-ந் தேதி சந்திரசேகரன், ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் 25 பேருடன் ஒரு மினி பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். மேலும் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
தண்ணீரில் மூழ்கினார்
தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் அனைவரும் மாமரத்துகடவு பகுதியில் காவிரி ஆற்றில் ஆனந்தமாக குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற சந்திரசேகரன், திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை அறியாத நண்பர்கள் தங்களது அறைக்கு திரும்பினர். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகரன் வராததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சந்திரசேகரனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மாமரத்துகடவு பகுதியில் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று, அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பிணமாக மீட்பு
இந்தநிலையில் நேற்று காலை தொங்கு பாலம் அருகே காவிரி ஆற்றில் சந்திரசேகரன் உடல் மிதந்தது. அதனை போலீசார் மீட்டனர். சந்திரசேகரன் பிணமாக கிடப்பதை பார்த்து அவருடைய நண்பர்கள் கதறி துடித்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ஜவுளி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.