காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி


காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி ஊராட்சி ஊர்கவுண்டர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி தெய்வானை (வயது 43). சக்திவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டநிலையில் தெய்வானை கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை தெய்வானை தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவரை காணாததால், அக்கம் பக்கத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே அவருடைய துண்டு இருந்தது. இதனால் அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அவர்கள், காரிமங்கலம் போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, தெய்வானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story