தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் கல்லூரி மாணவர் பிணம்
விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருத்தாசலம்,
ரத்த காயங்களுடன் பிணம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வயலூரில் உள்ள விருத்தாசலம்- சென்னை ரெயில்வே தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபா் ஒருவா் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தாா். இதுபற்றி அறிந்ததும் விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபாின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த வாலிபா் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த ஜெகதீசன் மகன் அரவிந்த் (வயது 20) என்பதும், மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தொியவந்தது.
கொலையா?
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாாின் போில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.