துறையூர் சின்ன ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


துறையூர் சின்ன ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x

துறையூர் சின்ன ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அந்த ஏரியை சுத்தப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

துறையூர், செப்.19-

துறையூர் சின்ன ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அந்த ஏரியை சுத்தப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன ஏரி

துறையூர் அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ளது சின்ன ஏரி. சமீபத்தில் பெய்த மழையால் இந்த ஏரி நிரம்பி உள்ளது. பச்சை மலையில் இருந்து செங்காட்டுப்பட்டி வழியாக மழைத்தண்ணீர் துறையூர் பெரிய ஏரிக்கு வரும்.

பெரிய ஏரி நிரம்பியதும் வரத்து வாரி வழியாக சின்ன ஏரிக்கு தண்ணீர் வரும். பெரிய ஏரியில் அதிக அளவில் மீன்கள் உள்ளன. அங்கு இருந்து அதிக அளவிலான மீன்கள் மழை நீர் மூலம் அடித்து வரப்பட்டுள்ளன.

துர்நாற்றம்

இதனால் சின்ன ஏரியிலும் அதிக அளவில் மீன்கள் உள்ளன. சுமார் 10 கிலோ எடை கொண்ட மீன்களும் காணப்படுகின்றன. போதிய பராமரிப்பு இல்லாததால் சின்ன ஏரியில் குப்பைகள் அதிக அளவில் உள்ளன. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சின்ன ஏரியில்உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் ஏரி பக்கம் செல்ல முடியாத நிலை உள்ளது.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சின்ன ஏரியை தூர்வாரி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் ஏரியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. ஏரியில் இருக்கும் தண்ணீர் நிறம் மாறி காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும் ஏரியில் உள்ள தவளைகளும் இறந்து கிடக்கின்றன.

இதனால் அங்கு சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. அருகே உள்ள பஸ் நிலையத்திலும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்புறப்படுத்த கோரிக்கை

துறையூர் பகுதியில் ஏற்கனவே காய்ச்சல் பரவி வருகிறது. இந்த துர்நாற்றத்தால் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள், தவளைகளை அப்புறப்படுத்தி, ஏரியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story