ஆடிப்பெருக்கையொட்டிகாவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் சாவு
சேலம்
ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பட்டதாரி வாலிபர்
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி ஊராட்சி ஆண்டி கவுண்டனூரை சேர்ந்தவர் அன்பு. இவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஹரி விக்னேஷ் (வயது 21), ஹரி பிரசாத் (16) என்ற 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் ஹரி விக்னேஷ் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். இவருடைய தம்பி ஹரி பிரசாத் மேச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இந்துமதி தனது 2 மகன்களுடன் ஆடிப்பெருக்கையொட்டி கூனாண்டியூர் காவிரி ஆற்றில் புனித நீராட சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஹரி விக்னேஷ் ஆற்றில் மூழ்கி விட்டார். தாய் இந்துமதி மற்றும் தம்பி ஆகியோர் அவரை காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஹரி விக்னேசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (47), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (42). இவர்களுக்கு சந்துரு (21), கோகுலகிருஷ்ணன் (19) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் துரைராஜ் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத துரைராஜ் சற்று மேடான இடத்தில் தண்ணீரில் மூழ்கி குளிக்கும் போது கவிழ்ந்து படுத்ததில் தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கி எதிர்பாராதவிதமாக இறந்தார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் போலீசார் அங்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான துரைராஜின் உடலை மீட்டனர். பின்னர் அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி, தாசில்தார் அறிவுடைநம்பி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோரும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கூனாண்டியூர், கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சேலம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.