தம்மம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
தம்மம்பட்டி
தம்மம்பட்டி அருகே உள்ள சவணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர் ரகுவுடன், கடந்த 30-ந் தேதி 74 கிருஷ்ணாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தகரபுதூர் கோவில் அருகே, நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் மோட்டார் சைக்கிளை 'சடன்' பிரேக் அடித்ததுள்ளார். இதில் வண்டியில் இருந்து நிலை தடுமாறி, பிரசாந்தும், அவரது நண்பரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் வண்டியில் பின்னால் அமர்ந்து வந்த பிரசாந்தின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று இரவு தலையில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டதால், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் இறந்தார். இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.